தியாகராய நகர் சாரதாம்பாள் தெருவைச் சேர்ந்த நூருல் ஹக் என்ற தொழிலதிபர் வீட்டில், கடந்த 1ஆம் தேதி நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல், 250 சவரன் நகை, கார் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்ற நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, பாண்டி பஜார் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தொழிலதிபர் நூருல் ஹக்கின் உறவினரான மொய்தீன்தான் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொய்தீனின் சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்திற்கு சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
பின்னர், மொய்தீனுக்கு உதவியதாக 9 பேரை கைது செய்த பாண்டி பஜார் காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி, மும்பையில் மொய்தீன் பதுங்கி இருப்பதை அறிந்தனர். இதையடுத்து மும்பைக்கு விரைந்த தனிப்படையினர், அங்கு முகாமிட்டு தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது, கொள்ளையடிக்கப்பட்ட 250 சவரன் தங்க நகைகளும் உருக்கப்பட்டு கட்டிகளாக மாற்றப்பட்டு விற்கப்பட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த தனிப்படை காவல்துறையினர், தலைமறைவாகவுள்ள முக்கிய குற்றவாளி மொய்தீனை தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 250 சவரன் கொள்ளை நிகழ்வு - தூத்துக்குடி விரைந்தது தனிப்படை