சென்னை: ஜமீன் பல்லாவரம் பச்சையம்மன் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மகள் கீர்த்திகா(20) இவர் குரோம்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வந்தார்.
இவருக்கும் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சென்னப்ப நாயக்கர் பாளையம் பகுதியை சேர்ந்த சுதீஷ் (24) என்பவருக்கும் இடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில் சுதீஷ் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கீர்த்திகாவிடம் பழகி வந்துள்ளார். பின்னர் கீர்த்திகாவை திருமணம் செய்ய மறுத்து வந்தார்.
இதனால் மனவேதனை அடைந்த கீர்த்திகா கடந்த 25ஆம் தேதி தனது அண்ணனுக்கு செல்போனில் ஆடியோ மற்றும் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டும், தனது சாவிற்கு தன்னை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் சுதீஷ் தான் காரணம் என்று கூறிவிட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுதீஷை விசாரணைக்காக பல்லாவரம் காவல் நிலையம் வருமாறு அழைத்தனர். இதனால் சுதாரித்துக் கொண்ட சுதீஷ் தலைமறைவாகி விட்டார்.பல்லாவரம் போலீசார் அவரது சொந்த ஊருக்கு சென்று அங்கு தலைமறைவாக இருந்த சுதீஷை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல பெண்களுடன் தனக்கு இருந்த உறவை கீர்த்திகா கண்டு பிடித்து விட்டதால் அவளை வெறுத்து ஒதுக்கியதாக தெரிவித்தான். பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தாய்லாந்திலிருந்து கடத்திவரப்பட்ட அரியவகை குரங்கு குட்டிகள் சென்னையில் உயிரிழப்பு