சென்னை: ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மக்களின் பாதுகாப்பை அரசே கவனித்துக் கொள்ளும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறி நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்யக்கோரிய வழக்கில் நீதிமன்றம் எந்த வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனவும் கூறியுள்ளது.
பொங்கல் பண்டிகையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதன்படி, அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். ஆனால், ஜல்லிக்கட்டு போட்டிகளில் அரசின் வழிக்காட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றுவதில்லை என நாமக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு திருவிழா சங்கத்தின் உறுப்பினர் கே.வேல்முருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்காவில் உள்ள பொன்னேரி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் அரசின் விதிகளை மீறி அறிவிக்கப்படாத இடத்தில் நடத்தப்படுவதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட வரும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசுத்தொகை ரூ.2000 வழங்கக்கோரிய வழக்கில் கோர்ட் எடுத்த முடிவு..!
வழக்கு விசாரணையின் போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன், அரசு வழக்கறிஞர்கள் சாதிக் மற்றும் கார்த்திக் ஆகியோரும் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு, தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு திருவிழாவிற்காக அரசு அரசாணை வெளியிட்டு, 800 மாடுகள் 400 வீரர்கள் அதில் கலந்து கொண்டுள்ளனர். இவ்வாறு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது மக்களின் பாதுகாப்பை அரசே கவனித்துக் கொள்ளும் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மனுதாரரின் நோக்கம் ஜல்லிக்கட்டை நிறுத்துவது போல் உள்ளது என்றனர்.
மேலும், விளையாட்டை விளையாட்டாக கருத வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கில் நீதிமன்றம் தலையிட்டு எந்த வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.