சென்னை: முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சிறுமி டான்யா சிகிச்சை முடிந்து, இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட டான்யாவை அமைச்சர் சா.மு.நாசர் பூங்கொத்து கொடுத்து வீட்டிற்கு வழி அனுப்பி வைத்தார்.
ஆவடி வீராபுரத்தைச்சேர்ந்த ஸ்டீபன்ராஜின் 9 வயது மகள் டான்யா முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். தொடர்ந்து சமூகத்திலும் ஒதுக்கப்பட்ட குழந்தையாகப் பார்க்கப்பட்டு வந்தார். இதுகுறித்து தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது.
பின்னர் இது குறித்து தகவல் அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமியின் சிகிச்சைக்கு நடவடிக்கை எடுக்கும்படி பால்வளத்துறை அமைச்சர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.
அதன்படி சிறுமி டான்யா கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தண்டலம் சவீதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கு ஆகஸ்ட் 23ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றது. 10 மருத்துவர்கள் உள்ளடங்கிய 33 பேர்கொண்ட மருத்துவக்குழு தொடர்ந்து 10 மணி நேரம் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.
இதனைத்தொடர்ந்து அவரச சிகிச்சைப்பிரிவில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்ததால் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதன் பின்னர் கடந்த 29ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் வந்து சிறுமி டான்யாவை சந்தித்து ஆறுதல் கூறி, நலம் விசாரித்தார்.
தொடர்ந்து சாதாரண வார்டில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சிறுமியை தினந்தோறும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தார். அப்பொழுது சிறுமி டான்யா வெள்ளிக்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகத்தால் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தொடர் சிகிச்சை கண்காணிப்பு தேவைப்பட்டதால் வீடு திரும்பும் தேதியானது இன்று(செப். 12) மாற்றப்பட்டது. இந்த நிலையில் டிஸ்சார்ஜ் நடைமுறைகள் முடிவடைந்தது சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அப்போது மருத்துவமனைக்கு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரடியாக சென்று டான்யாவிற்கு பூங்கொத்து கொடுத்து, குழந்தையை தூக்கி கொஞ்சி, இன்முகத்தோடு டிஸ்சார்ஜ் செய்து, ஆம்புலன்ஸ் உதவியுடன் வீட்டுக்கு வழி அனுப்பி வைத்தனர்.
28 நாட்களுக்குப் பிறகு, சிகிச்சை முடிந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சிறுமி டான்யாவை அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். டான்யா உடன் படிக்கும் பள்ளி மாணவி மாணவர்களும் ரோஜா பூக்களை கொடுத்து அன்புடன் வரவேற்றனர். பின்னர் டான்யா சக மாணவ மாணவிகளுக்கு இனிப்புகளைக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: போக்குவரத்து நெரிசல் - மருத்துவமனைக்கு 3 கிமீ தூரம் ஓடி சென்ற மருத்துவர்