சென்னை: பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் தலைவரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான வசந்திதேவி, பள்ளி கல்வித் துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “இந்தக் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ கல்வி வாரியம் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதற்கான மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்கிறோம்.
பெருந்தொற்று கொடிய தாக்கத்தை விளைவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மாணவர்கள், ஆசிரியர்களின் உயிர், உடல் நலனும் முதன்மை பெறுகின்றன. தொற்று பரவலும், அதன் வீச்சும் என்று முடியும் என்ற உத்தரவாதமும் இல்லை. மூன்றாம் அலையும் வீசும் என்ற அச்சுறுத்தல்கள் இருக்கின்றன.
இந்த நிலையில் தொற்று முடிந்ததும் தேர்வு நடத்தலாம் என்பது முடிவற்ற காத்திருப்பாக இருக்கும். மாணவர்களும் பெற்றோர்களும் தேர்வு எப்போது என்ற தவிப்பில் மீண்டும் தேர்வுக்காக தயார்படுத்துவதில் மாதக்கணக்கில் வாழ வேண்டி இருக்கும். ஆகவே 12ஆம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
ஒன்றிய அரசின் அறிவிப்பை தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்ய வேண்டும். அதே நேரத்தில் நீட் போன்ற மத்திய அரசு நடத்தும் மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு அல்லது வேறு உயர்க் கல்வி பாடங்களுக்கு மத்திய அரசு நடத்த திட்டமிடும் எந்த தேர்வையோ நடத்துவதை ஏற்றுக் கொள்ளவே இயலாது. பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் மாணவர்கள் நலன் கருதி ரத்து செய்யப்படுகின்றன என்றால், அதே நலன் காரணமாக நீட் போன்ற தேர்வுகளும் அந்த மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட வேண்டும். இதற்கான உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டும். மற்ற மாநிலங்களுடன் தொடர்பு கொண்டு இதே நிலையை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.
ஒன்றிய அரசின் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்துவிட்டு நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த அறிவிப்பையும் செய்யாமல் இருப்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. புதிய கல்வி கொள்கை 2020இல் மருத்துவக் கல்வியில் மட்டுமல்ல, எந்த வகைப்பட்ட உயர் கல்வியாக இருந்தாலும் இனிவரும் காலங்களில் மத்தியிலிருந்து நாடு முழுவதற்கும் பொதுவாக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் தான் சேர இயலும் என்று கூறுகிறது.
ஒன்றிய அரசின் இந்தக் கொள்கையை மறைமுகமாக பின்வாசல் வழியாக புகுத்தி நிறைவேற்றுவது தான் பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வை ரத்து செய்ததன் உள்நோக்கம் என்று அஞ்சுகிறோம். இதனை தமிழ்நாடு அரசு புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். ஒன்றிய அரசின் நீட் போன்ற தேர்வுகள் நாடு முழுவதும் நடத்தப்படும் என்ற அறிவித்தால், தமிழ்நாடு அரசு 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்றும், அதனடிப்படையில் மாநில உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதையும் தெள்ளத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் இந்த நிலைப்பாட்டை ஒன்றிய அரசுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்“ எனத் தெரிவித்திருந்தார்.