சென்னை: ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த கப்பல் துணைத் தலைவருக்கு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கால் மூட்டு மறுசீரமைப்பு சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த 46 வயதான மல்காஸ் சுர்மானிட்ஜ், ஒரு சரக்குக் கப்பலின் துணைத் தலைவராக பணியாற்றி வந்தார். ஜூன் 23ஆம் தேதியன்று, அவரது கப்பல் சென்னை கடற்கரையில் இருந்தபோது அவரது கால் கொள்கலன்களில் சிக்கியது. அவர் தனது காலை உடனடியாக இழுத்ததன் மூலம் உயிர் சேதம் தடுக்கப்பட்டது. ஆனால் கால் நசுங்கி கடும் காயம் ஏற்பட்டு சேதம் அடைந்திருந்தது.
உடனடியாக அவரை சென்னை துறைமுகத்திற்கு அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கிருந்து அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவமனையின் வாஸ்குலர் (ரத்த நாள அறுவை சிகிச்சை) நிபுணர் ராஜராஜன் வெங்கடேசன், அவரை பரிசோதனை செய்தார். கோவிட்-19 தடுப்பைக் கருத்தில்கொண்டு போதுமான முன்னெச்சரிக்கைகளுடன் மூட்டுப் பாதுகாப்பு மறுசீரமைப்பு (பாப்லிட்டல் தமனி ஒட்டுதல்) செயல்முறை மற்றும் லிபரல் லெக் ஃபாசியோடோமி செயல்முறை ஆகியவை செய்யப்பட்டன.
அதைத் தொடர்ந்து அளிக்கப்பட்ட சிகிச்சையில் தாமாகவே நடக்கத் தொடங்கியுள்ளதுடன், தனது வேலையில் சேர தகுதி பெற்றார். அனைத்து தீவிர காயங்களின்போதும், ரத்த நாளக் (வாஸ்குலர்) காயத்தை முன்கூட்டியே கண்டறிந்து நான்கு மணி நேரத்திற்குள் ரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பது மூட்டுகளைக் காப்பாற்றுவதற்கும், ஊனத்தைத் தடுப்பதற்கும் முக்கியமானதாகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.