சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் திறந்திருக்கும் நேரம் குறித்து மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் சென்னை மாநகராட்சியில் இருந்து சரியான தகவல் வராததால், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
கேட்கப்பட்ட தகவல்கள்: அந்த மனுவை தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளார். அதில், "சென்னை மண்டலம்-2, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தின் எல்லைக்குட்பட்ட கோட்டம் 15 முதல் 21 ஆகிய 7 கோட்டங்களில் உள்ள பூங்காக்களின் மொத்த எண்ணிக்கை, பணியாளர் விவரங்களை கேட்டுள்ளார்.
பகல் நேரங்களில் பூங்காக்கள் மூடப்பட்டுள்ளதாகவும், எதன் அடிப்படையில் பூங்காங்கள் பகல் நேரங்களில் மூடப்பட்டுள்ளன என்பது குறித்து விசாரணையின் போது தகவலாக கேட்டுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 525 பொது பூங்காக்கள் உள்ள நிலையில், பெரும்பாலான பூங்காக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி அல்லது 4 மணி வரையில் பூட்டப்பட்டு உள்ளது. கரோனா காலத்தில் இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்பட்டு இருக்கலாம். தமிழ்நாடு அரசு கரோனா விதிமுறைகளுக்கு தளர்வுகள் அளித்த பிறகும் இதே நடைமுறை தொடர்வதற்கு வாய்ப்பும் இருக்கிறது.
நீதிபதி உத்தரவு: மேலும், பெரும்பாலான மக்கள் பணி நிமித்தமாக நடந்து செல்லும் போதும், மிதிவண்டியில் செல்லும்போதும் கோடை வெயிலின் தாக்கத்தால் அவர்கள் தங்களுக்காக ஒய்வு எடுத்துக்கொள்வதற்கு இடம் இல்லாமல் சிரமப்படுகிற சூழ்நிலையில், பொது மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட பூங்காக்கள் மூடியிருப்பது சரியானது அல்ல.
எனவே, மாநகராட்சி பூங்காக்கள் எந்த உத்தரவின் அடிப்படையில் பகல் நேரங்களில் மூடப்படுகிறது என்பதையும், பூங்காக்கள் எப்போது திறக்கப்பட வேண்டும், எப்போது மூடப்பட வேண்டும் என்ற உத்தரவை வழங்க வேண்டும்" என அந்த உத்தரவில் கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், "சென்னை மாநராட்சி மன்ற தீர்மான எண் 555/2012-ன் நாள் 6.12.2012-ன்படி, பார்வையாளர்களின் நேரம் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் திறந்திருக்க அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் 2012ஆம் ஆண்டு முதல் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையில் முழுநாளும் இடைவெளியின்றி திறந்திருந்த நடைமுறையில் இருந்து வந்தது.
2020ஆம் ஆண்டு முதல் கரோனா விதிமுறையில், இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு, பூங்காக்கள் காலை, மாலை நேரங்களில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்பொழுது கரோனா கட்டுப்பாடு நடைமுறைகள் விலக்கி கொள்ளப்பட்டதை தொடர்ந்து, முழு நேரம் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது" என பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அதிகரிக்கும் கரோனா!- மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க உத்தரவு