சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று பன்முகத் தன்மை கொண்ட பஞ்சு அருணாச்சலத்தின் 80ஆவது பிறந்தநாள் விழா தொடர்பாக பா. ஆர்ட் புரொடக்சன்ஸ் மற்றும் பிளாக் ஷீப் குழுவினர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விழா தொடர்பான லோகோவை வெளியிட்டனர். ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டமாக விழா நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் கங்கை அமரன் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால், எங்கள் பரம்பரை இல்லை. எங்கள் குடும்பத்துக்கு பிள்ளையார் சுழி போட்டவர் பஞ்சு அருணாச்சலம். சிறிய வயதிலிருந்தே என்னை பாடலமைக்கவும், இளையராஜாவை இசையமை ஆர்வத்தை தூண்டியதும் இவர்தான்.
சினிமாவில் இளையராஜாவை தொட்டு தூக்கியவர் பஞ்சு அருணாச்சலம். என்னை தொட்டு தூக்கியவர் பாரதி ராஜா" என்றார். இதையடுத்து பேசிய இயக்குநர் பாரதிராஜா, "பஞ்சு அருணாச்சலம் மென்மையான மனிதர். நான், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் அவரது வீட்டு உப்பை தின்று வளர்ந்தவர்கள்.
காலில் விழுந்து வணங்க வேண்டிய மகா தெய்வம் பஞ்சு அருணாச்சலம். தவறு இருந்தால் திருத்தங்களை சொல்வார். என் படங்கள் எல்லாம் அவரது பார்வையிலேயே இருக்கும். பஞ்சு அருணாச்சலத்துக்கு விழா எடுப்பது தமிழ் சினிமாவின் கடமை.
பஞ்சு அருணாச்சலம் இல்லையென்றால் இசைஞானி உருவாகியிருக்க முடியாது. தமிழ் திரையுலகம் ஒன்று சேர்ந்து பஞ்சு அருணாச்சலத்திற்கு பிரம்மாண்டமாக விழா எடுத்து மரியாதை செலுத்த வேண்டும்" என்றார்.
இறுதியாக பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, "திரையுலகில் சாதனை படைத்தவர் பஞ்சு அருணாச்சலம். அவரது காலம் திரையுலகில் பொற்காலம். அவருக்கு திரைத்துறை சிறப்பு செய்ய வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: திருச்சிற்றம்பலம் மூவி அப்டேட்; தனுஷின் கேரக்டர் என்ன தெரியுமா?