விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த வீட்டு வேலை செய்துவரும் தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தத் தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதையடுத்து அந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் அவர்கள் சென்னையில் வீட்டு வேலை மற்றும் கட்டட வேலை பார்த்துவந்துள்ளனர். இரண்டு சிறுமிகளும் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு விழுப்புரத்திலிருந்த குழந்தைகளை பார்க்க அப்பெண் சென்றுள்ளார்.
அப்போது இரு குழந்தைகளும், தங்களை உறவினர்கள் எட்டு பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அழுதுகொண்டே தாயிடம் கூறியுள்ளனர். பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் அனைவருமே உறவினர்கள் என்பதால், குழந்தைகளின் தாயார் அதுகுறித்து யாரிடமும் சொல்லாமல் குழந்தைகளை பாண்டிச்சேரியிலுள்ள அரசு பள்ளியில் சேர்த்துள்ளார்.
அங்கு சேர்க்கப்பட்ட சில நாளிலேயே இரு குழந்தைகளும் உடல்நலம் குன்றி காணப்படவே, அவர்களை விசாரித்த பள்ளி ஆசிரியரிடம் நடந்த விஷயங்களையெல்லாம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி ஆசிரியர், உடனடியாக இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில் விழுப்புரம் காவலர்கள் இரு குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்த எட்டு நபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள் மருத்துவ சிகிச்சை முடிந்ததும் சென்னை சாலிகிராமத்தில் தாயுடன் வசித்துவந்தனர்.
இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி ஏழு வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து உடனடியாக குழந்தையை அருகிலுள்ள கேகே நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையை சோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கேகே நகர் காவலர்கள் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த சிறுமியின் உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
பெற்றோரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு வயிறு வலிப்பதாக சிறுமி கூறியுள்ளார். இதனால், சாதாரண வயிறு வலி மாத்திரை வாங்கி கொடுத்ததாகவும், மேலும் சிறுமி பல முறை கழிவறைக்கு சென்று வந்துள்ளதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கழிவறைக்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், சிறுமியின் தந்தை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததாகவும், அப்போது கழிவறையிலே மயங்கியிருந்த சிறுமியை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் காவல் துறையினரிடம் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
உடற்கூறாய்வின் அறிக்கை வந்த பின்பே சிறுமியின் மரணத்திற்கான காரணம் தெரியவரும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பள்ளி மாணவனின் இறப்பில் சந்தேகம்: உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்