விநாயகர் சதுர்த்தி வழிபாடு தொடர்பாகத் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் ஆகியோர் முதலமைச்சர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த காடேஸ்வர சுப்பிரமணியம், "37 ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டுவருகிறது. எந்தவொரு நற்செயலும் விநாயகரை வழிபட்ட பின்னரே தொடங்குவார்கள்.
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக ஊர்வலங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனால் விநாயகர் சதுர்த்தியை ஊர்வலமின்றி, பொது இடங்களில் சிலை மட்டும் வைத்து வணங்கிவிட்டு, ஐந்து நபர்களைக் கொண்டு கரைக்க முடிவுசெய்துள்ளோம்.
அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் தெரிவித்துள்ளோம். இது குறித்து அவர், சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஆலோசித்து முடிவு தெரிவிப்பதாகக் கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து பேசிய எல். முருகன், "40 ஆண்டுகளாக மக்கள் கொண்டாடிவரும் விநாயகர் சதுர்த்திக்கு அரசின் சட்ட விதிமுறைகளுக்குள்பட்டு வழிபடுவதாக உத்தரவாதம் அளித்து, அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவைத்துள்ளோம்.
ஆலோசனை செய்துவிட்டு பதிலளிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அவர் அனுமதி வழங்குவார் என நம்புகிறேன். அவருடனான சந்திப்பு திருப்திகரமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அரசின் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்' - இந்து மக்கள் கட்சி!