உத்தமர் காந்தியின் நினைவு நாள் நாளை கடைபிடிக்கப்படுவதையொட்டி, தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தியாகிகள் தினம் என்ற தலைப்பில் இணையதள கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில் பேசிய, காந்திகிராம் ஊரக நிறுவன சமூக அறிவியல் பிரிவின் தலைவரும், காந்திய படிப்புகளுக்கான மையத்தின் பேராசிரியருமான வில்லியம் பாஸ்கரன், “சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டுமே இளைஞர்கள் சார்ந்து இருக்கக் கூடாது, மாறாக ஆழமாகப் படித்து செயல்வீரர்களாக காந்தியின் குறிக்கோள்களை பின்பற்றி பணியாற்ற வேண்டும். காந்தி சுகாதாரத்திற்கும் உணவு பழக்க வழக்கங்களுக்கும் முக்கியத்துவத்தை வழங்கியதோடு, எண்ணிலடங்கா மக்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்” என்றார்.
தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநரான அண்ணாமலை பேசும்போது, ”காந்தி துப்புரவு பணிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை வழங்கி, வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் தமது கழிவறைகளோடு, பொது கழிவறைகளையும் சுத்தம் செய்து முன்னுதாரணமாகத் திகழ்ந்தார். கழிவுகளை உருவாக்காத வாழ்க்கை முறையை நாம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக அறிமுக உரை நிகழ்த்திய பத்திரிகை தகவல் அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் அண்ணாதுரை, ”தூய்மை குறித்த காந்தியின் எண்ணங்கள் நமது சமூகத்திலிருந்து தீண்டாமையை ஒழிக்கும் காரணியாக இருந்தது. ஒரு பிரிவு மக்கள், இதர பிரிவினரின் தூய்மை மற்றும் துப்புரவு பணிகளில் ஈடுபட்டதை காந்தி வன்மையாக எதிர்த்தார்” என்றார்.
இந்நிகழ்வில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலகத்தின் இணை இயக்குநர் காமராஜ் வரவேற்புரையையும், அதிகாரி வித்யா நன்றியுரையையும் வழங்கினர்.
இதையும் படிங்க: வீதி தோறும் நூலகம்! அரசுக்கு வழிகாட்டும் மருதநாயகம்!