நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கிணறுகளில் இருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு எரிவாயுவை எடுத்துச் செல்ல இரண்டு ஆண்டுகளுக்கு முன் விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கெயில் நிறுவனம் மேற்கொண்ட இந்தப் பணிக்கு விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
ஆனால், தற்போது கரோனா ஊரடங்கு காலத்தில் சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து பழையபாளையம் வரையிலான பாதையில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கெயில் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தப் பகுதிகளையும் உள்ளடக்கிதான் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் பழனிசாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தார்.
இப்போது அங்கே விளைநிலங்களை ஐந்து அடி ஆழத்திற்குத் தோண்டி எரிவாயு குழாய்களைப் பதித்தால் அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும்?
இதற்கெல்லாம் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே' பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை' என்று தமிழ்நாடு அரசு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
வெற்று வேளாண் மண்டல அறிவிப்புக்காக பட்டம் சூட்டிக்கொண்ட முதலமைச்சர் பழனிசாமிக்கு உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருக்குமானால் விளைநிலங்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தேவையான விதிமுறைகளை உடனடியாக வகுக்க வேண்டும்"என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ’இழப்பீடு வழங்கிய முதலமைச்சருக்கு விவசாயிகள் நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும்’