சென்னை: சென்னையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உடன் மாநகராட்சி ஆணையரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ககன் தீப் சிங்பேடி இன்று (ஜன. 29) ஆலோசனை நடத்தினார்.
இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளான அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ககன் தீப் சிங் பேடி, "அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைவரின் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டோம். நேற்று (ஜன. 28) சென்னை மாநகராட்சி உள்பட்ட பகுதிகளில் இரண்டு நபர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
45 பறக்கும் படைகள் அமைப்பு
வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்வதற்கு உள்ளே செல்ல வேண்டும், வேட்பாளர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் அவரை முன்மொழிபவர் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது இரண்டு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர்கள் ரூ.90 ஆயிரம் வரை செலவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இதை அனைத்தையும் கண்காணிக்க 45 பறக்கும் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுவர் விளம்பரங்கள், விளம்பர பலகைகள் போன்றவை பொது இடங்களில் வைக்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பரப்புரை மேற்கொள்ளக் கூடாது.
அதேபோல் பரப்புரைக் கூட்டம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கூட்டவேண்டும். ஆனால், பரப்புரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை செய்து கொள்ளலாம். மேலும், வரும் 31ஆம் தேதி வரை பேரணி, பொதுக்கூட்டத்திற்கு அனுமதி இல்லை. அதேபோல், உள்ளரங்கில் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உதவி பொறியாளர் தாக்குதல் விவகாரம்
கரோனா தொற்று பாதித்த நபர்கள் தேர்தல் நாள் அன்று மாலை 5 முதல் 6 மணி வரை வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நேரத்தில் முகக்கவசம் அணியாமல் வேட்பாளர்கள், கட்சி சார்ந்த நபர்கள் பரப்புரையில் ஈடுபட்டால் நோய் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால், ரூ.500 அபராதம் விதிக்கப்படும்
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள் உள்பட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களுக்கு வரும் திங்களன்று (ஜன. 31) முதற்கட்டமாக 24 பயிற்சி மையங்களில் பயிற்சி நடைபெற உள்ளது. பங்கேற்காதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓரிரு நாள்களில் சென்னையில் உள்ள மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அங்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். மாநகராட்சி உதவிபொறியாளர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பொதுபணியில் ஈடுபடும் மாநகராட்சி அலுவலர்களின் பணியின் போது இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, முறையாக விசாரித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் இறங்கும் விஜய் மக்கள் இயக்கம்