சென்னை: தென்மேற்கு பருவமழையினை காரணமாக சென்னையில் ஒரு சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதனால், கொசுப்புழுக்களின் பெருக்கம் அதிகரித்து வருகிறது. கொசுக்களின் மூலம் பரவும் டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற பல்வேறு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது.
இதனை கட்டுப்படுத்த 15 மண்டலங்களுக்குட்பட்ட 200 வார்டுகளிலும் நேற்று (ஜூலை 23) முதல் தினந்தோறும் காலை 6 மணி முதல் 7.30 மணிவரை மற்றும் மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை இரண்டு வேளை கொசுப் புகைப்பரப்பும் பணி மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிடத்துள்ளது.
நீர்வழிக்கால்வாய்களில் கொசுப்புழுக்களின் உற்பத்தியை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த 225 கைத்தெளிப்பான்கள், 346 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய கைத்தெளிப்பான்கள் மற்றும் 130 விசைத்தெளிப்பான்கள் மூலம் கொசுப்புழு நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனுடன் சேர்ந்து கொசுப் புகைப்பரப்பும் பணிகளில் 3 ஆயிரத்து 437 பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
இந்தப் பணியாளர்களின் மூலம் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள், 245 கையினால் கொண்டு செல்லும் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 9 சிறிய வகை புகைப்பரப்பும் இயந்திரங்களைக் கொண்டு
நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் குடிசைப் பகுதிகள் மற்றும் கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் புகைப்பரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையும் படிங்க:உள்ளாட்சி விதிகளில் மாற்றம்…! ஊராட்சி தலைவரின் உரிமை பறிபோகிறதா?