பெருங்குடியில் அமைந்துள்ள ஜெம் தனியார் மருத்துவமனையில், பொதுமக்களுக்கு இலவச கல்லீரல் சிகிச்சை பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பேசிய மருத்துவமனை தலைமை நிர்வாக அலுவலர், “புற்றுநோய் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, உடல் பருமன் ஆகிய சிகிச்சைகளில் லேப்ரோஸ்கோபி முறையைச் செயல்படுத்தி வருகிறோம்.
இந்த இலவச மருத்துவ முகாம் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறுவார்கள். மருத்துவமனையில் சிறப்பு நிபுணர்கள் அமைத்து பி, சி வைரஸ் பரிசோதனையும், அதற்கான தடுப்பூசியையும் இலவசமாக மருத்துவ முகாமில் அளித்துள்ளோம். கல்லீரலில் உள்ள ஃபிப்ரோசிஸ் (fibrosis) அளவை சோதனை செய்யும் சிறப்பு இயந்திரம் பயன்படுத்தி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.
அதன்பின் பேசிய, சிறப்பு அழைப்பாளரான நடிகர் சரத்குமார் கூறுகையில், தான் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருப்பதற்கு, தன் உடல் ஆரோக்கியமே காரணம் என்றும், 65 வயது ஆகியும் தன் உடல் வலிமையாகத் தான் இருப்பதாகவும் கூறினார். மேலும், இதைப் போல அனைவரும் தங்கள் உடலை அவ்வப்போது பரிசோதனை செய்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
இதைத் தொடர்ந்து புதிய கல்விக்கொள்கை முறை குறித்த கேள்விக்கு, தான் கஸ்தூரிரங்கனின் அறிக்கையை இன்னும் படிக்கவில்லை என்றும், படித்த பிறகு அதைக்குறித்த கருத்தைத் தெரிவிப்பதாகவும் கூறினார்.