தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை திட்டத்தில், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசால் ஒப்பந்ததாரர்கள் மூலம் தரமற்ற நூல் வழங்குவதை தடுக்கும் வகையில், நூல்களின் தரத்தை சோதனை செய்ய நிபுணர்கள் அடங்கிய உயர்மட்ட கண்காணிப்புக்குழு அமைக்க திருப்பூர் மாவட்ட நெசவாளர் சங்கத்தலைவர் கோவிந்தராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், இலவச வேட்டி சேலை திட்டத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ.250 கோடி அளவிற்கு நூல்கள் வாங்கப்படுகிறது. இதில் தரமற்ற நூல் நெசவாளர்களுக்கு வழங்கப்படுவதால் தரமற்ற வேட்டி சேலைதான் உற்பத்தி செய்யக்கூடிய நிலைமை உள்ளது. இதனால் நெசவாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்யநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், அதிகாரிகளின் முறைகேடுகள் குறித்து ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஏற்கனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்டார்.
இதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நூல்களின் தரத்தையும், தயாரிக்கப்பட்ட பின் வேட்டி, சேலைகளையும் ஏன் பரிசோதனை செய்வதில்லை? என்று கேள்வி எழுப்பி, அரசின் கைத்தறித்துறை செயலாளர் மற்றும் கைத்தறி இயக்குநர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'சிவன் சொத்து குல நாசம்' - நீதிபதிகள் எச்சரிக்கை!