தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின்னர் ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களை அரசு இலவசமாக வழங்கிவருகிறது. வழக்கம்போல் இந்த ஆண்டும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங்கள் மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு-வருகிறது.
அந்தவகையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசுப்பள்ளி ஒன்றில் இருந்து அம்மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கான பாடப்புத்தகங்கள் அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன. அரசால் வழங்கப்படும் நோட்டு புத்தகத்தில் பள்ளிக் கல்வித் துறையால் அளிக்கப்படும் 14 வகையான நலத்திட்டங்களும் அச்சிடப்பட்டுள்ளன. பள்ளிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜூன் மூன்றாம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.