கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கவுதம் சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு, உத்தம் சி.ஜெயின் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி மகேந்திரசிங் ரங்கா, நேமிசந்த், ஹிராகுமார் ஆகியோர் 1 கோடியே 35 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். இதில் 60 லட்சம் ரூபாயை வழக்கை விசாரித்த கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளர் சம்பத்குமாருக்கு வழங்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை வழக்குப்பதிவு செய்து ஐபிஎஸ் அலுவலர் சம்பத்குமார் உள்பட நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சென்னையிலுள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சம்பத்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து 81 சாட்சிகளிடமிருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஒம் பிரகாஷ், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பில் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கவில்லை என்று கியூ பிரிவு காவல் கண்காணிப்பாளர் சம்பத்குமார் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கைவிடப்பட்ட பிக் பாஷ் போட்டி; காரணம் மழையல்ல புகை!