சென்னை: ராயபுரம் 51ஆவது வார்டு திமுக கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் மார்ச் 30ஆம் தேதி நள்ளிரவு ராயபுரத்தில், தனது ஆதரவாளர்களுடன் மது அருந்தியதுடன், வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியதாக கூறப்படுகிறது.
அப்போது, ரோந்து பணியில் இருந்த வண்ணாரப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் தியாகராஜன், மணிவண்ணன் ஆகியோர் இவர்களை கண்டித்துள்ளனர். இதனால் கோபமடைந்த ஜெகதீசன் "எங்களை கேட்பதற்கு நீங்கள் யார்?. நான் நினைத்தால் உன்னை காலி செய்து விடுவேன்" என்று மிரட்டியுள்ளார்.
இதுதொடர்பாக காவலர் தியாகராஜன், வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் ஜெகதீசன், சதீஸ், வினோத் உள்ளிட்ட 5 பேர் மீதும் கும்பலாக கூடுதல், அவதூறாகப் பேசுதல், அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஜெகதீசன், சதீஸ், அறிவழகன், வினோத் ஆகிய 5 பேர் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு நேற்று (ஏப். 6) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவலர்களையே மிரட்டும், இந்த நபர்களால் மற்றவர்களின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும். இதுபோன்ற செயல்களை அனுமதித்தால் சட்டம் ஒழுங்கை பராமரிக்க காவல்துறைக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இவர்களின்முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் விசாரணையில் பெண்ணிடம் ஆபாசம் - ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கிய வழக்கறிஞர்