சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை குறித்தான விவாதம் சூடுபிடித்துள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செங்கோட்டையன், தம்பிதுரை ஆகியோர் இன்று (ஜூன்19) ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் தம்பிதுரை எம்.பி., அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, எம்ஜிஆர் மன்ற மாவட்டச் செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன், அதிமுக தேனி மாவட்டச்செயலாளர் சையது கான், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள், ஒன்றியச்செயலாளர்கள் உள்ளிட்டோர் வருகை தந்து உள்ளனர். மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இவை ஒருபுறமிருக்க அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில் அதிமுகவில் முக்கியமாக கருதப்படும் இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்டத்தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளுக்கு மாறி மாறிச்சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் உடனான ஆலோசனையைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனையில் ஈடுபடுவதற்காக அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தம்பிதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் சென்றுள்ளனர்.
கடந்த ஜூன் 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் 23ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெற உள்ள நிலையில் ஒற்றைத்தலைமை விவகாரம் அதிமுகவினர் மத்தியில் மிகவும் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: 1987ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் எழுந்த "ஒற்றைத் தலைமை" விவகாரம்... ஒரு விரிவான அலசல்...