சென்னை: சென்னையில் இருந்து மஸ்கட் செல்லும் ஓமன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. இந்த விமானத்தில் பெரும் அளவு கணக்கில் இல்லாத கள்ளப்பணம் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அலுவலர்கள், இந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த 158 பயணிகளையும் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது சென்னை, ராமநாதபுரம் பகுதிகளைச்சோ்ந்த 4 பயணிகள் மீது அலுவலர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்கள் 4 பேரும் இந்த விமானத்தில் மஸ்கட் வழியாக, துபாய் செல்வதற்கான விமான டிக்கெட்கள் வைத்திருந்தனா். இதை அடுத்து 4 பேரையும் நிறுத்தி சோதனையை செய்தனா்.
அவர்களுடைய உடைமைகளுக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா் மற்றும் யூரோ கரன்சி, வெளிநாட்டுப் பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். 4 பேரின் உடைமைகளிலும் ரூபாய் 50 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை சுங்க அலுவலர்கள் கைப்பற்றினார். இதை அடுத்து 4 பேரின் பயணங்களை சுங்கத்துறையினா் ரத்து செய்தனா்.
பின் 4 பேரையும் சுங்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தினார். அப்போது இவர்கள் 4 பேரும் கூலிக்காக வெளிநாட்டிற்கு இந்தப் பணத்தை கடத்திச்செல்வதாக தெரிய வந்தது. இவர்களிடம் ரூபாய் 50 லட்சம் மதிப்புடைய பணத்தை கொடுத்து அனுப்பிய ஆசாமி யார்? என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மதுரை மல்லி... கிலோ ரூபாய் இரண்டாயிரத்தை தொட்டது!