foreign currency seized: சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாராக இருந்தது.
அந்த விமானத்தில் சில பயணிகள் வெளிநாட்டு கரன்சிகளை உள்ளாடைகளுக்குள் மறைத்து கடத்துவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருவாய்ப் புலனாய்வுத் தனிப்படையினர் சென்னை பன்னாட்டு விமான நிலையம் விரைந்துவந்தனர். அவர்களுடன் விமான நிலைய சுங்கத் துறையினரும் சேர்ந்து, அந்த விமானத்தில் உள்ள அனைத்துப் பயணிகளையும் சோதனையிட்டனர்.
அந்த விமானத்தில் ஒரு குழுவாகப் பயணித்த சென்னையைச் சேர்ந்த ஏழு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவா்களைத் தனியாக அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.
அப்போது அவர்களின் உள்ளாடைகளுக்குள் கட்டுக்கட்டாக வெளிநாட்டுப் பணத்தை மறைத்துவைத்திருந்தனர். சவூதி ரியால், அமெரிக்க டாலர் ஆகிய வெளிநாட்டுப் பணம் இந்திய மதிப்பிற்கு மொத்தம் ரூ.58.53 லட்சம் இருந்தது.
இதையடுத்து அலுவலர்கள் அந்தப் பணத்தைப் பறிமுதல்செய்தனர். அதன்பின்பு ஏழு பேரின் விமான பயணங்களை ரத்துசெய்தனர். மேலும் வெளிநாட்டுப் பணத்தை துபாய்க்கு கடத்த முயன்ற அவர்களை சுங்கத் துறையினர் கைதுசெய்து, விசாரணை நடத்துகின்றனர்.
இதையும் படிங்க: Tax evasion in UP: ரூ.150 கோடி வரி ஏய்ப்பு - IT ரெய்டில் சிக்கிய உ.பி.,தொழிலதிபர்கள்