சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
இந்தத் திட்டம் மூலம் தமிழ்நாட்டில் நியாயவிலைக் கடை பொருள்கள் தடையின்றி கிடைக்கும். இத்திட்டத்திற்கு கூடுதல் விதிகளுடன் 5 விழுக்காடு பொருள்களை கூடுதலாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்த ஒரு இடத்திலும் நியாயவிலைக் கடை பொருள்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் குடும்ப அட்டையை கண்டிப்பாக பயோமெட்ரிக் முறையில் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நியாயவிலைக் கடைகளில் பணம் கொடுத்து பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம். அதேபோல், மற்ற மாநிலங்களில் வசித்துவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள்.
ஏற்கனவே சோதனை முறையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது. கரோனா காலத்தில் மூன்று லட்சம் குடும்ப அட்டைதார்களுக்கு வீடுகளுக்கே சென்று பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டது" என்று தெரிவித்தார்.