தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாநில அவசர செயற்குழுக் கூட்டம் சென்னை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அனுமதி தராததால், அரசு மருத்துவர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அடுக்குமாடி கட்டிட நுழைவாயில் முன்பாக அமர்ந்து தங்களின் மாநில அவசர செயற்குழுவை நடத்தினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவர் சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ”தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது. இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை காரணம் காட்டி மருத்துவர் பணியிடங்களை மேலும் குறைக்கிறது. எனவே இதனைத் திரும்பப் பெற வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு முறைப்படி வழங்க வேண்டிய ஊதிய உயர்வினை வழங்க வேண்டும். பட்ட மேற்படிப்பு படித்த மருத்துவ மாணவர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்திட வேண்டும்.
பட்ட மேற்படிப்பு, உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளில் தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே போராட்டம் நடத்தினோம். அப்போது எங்களை அழைத்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆறு வாரங்களுக்குள் பேசி குறைகளைத் தீர்த்து வைப்போம் என அறிவித்தார்.
ஆனால் அதற்கான காலக்கெடு முடிவடைந்த பின்னரும் கூட இன்னமும் குறைகளை நிவர்த்தி செய்யவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற அவசர செயற்குழுக் கூட்டத்தில், அரசு அறிவித்தது போல் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டியுள்ளதால், தேர்தல் நடத்தை விதிகள் 24ஆம் தேதி முடிவடைந்த பின்னர் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். ஒருவேளை அன்றும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தராவிட்டால், வரும் 25ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் அனைவரும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு எடுத்துள்ளோம்”, எனத் தெரிவித்தார்.