சென்னையைச் சேர்ந்த மனநல சிகிச்சை நிபுணரான பிளாரன்ஸ் ஹெலன் நளினி, அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் அடுத்த வாரம் நடைபெற உள்ள மிஸஸ் உலக அழகிப்போட்டியில் ’மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்-2022’ என்ற பட்டத்துக்காக இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளார். இதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து பிளாரன்ஸ் ஹெலன் நளினி இன்று (அக்.13) அமெரிக்கா புறப்பட்டுச்சென்றார்.
அப்போது பிளாரன்ஸ் ஹெலன் நளினி செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக் அழகு போட்டியில் பங்கேற்று தமிழ்நாட்டில் இருந்து நான் மட்டுமே வெற்றி பெற்றேன். மாடலிங் துறையில் வல்லமை பெற்றவர்கள் கலந்துகொண்ட அந்தப்போட்டியில் நான் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
போட்டியில் பங்கேற்பதற்கு முன் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டேன். பிறகு போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். இந்தியா சார்பில் தமிழ்நாட்டில் இருந்து முதல்முறையாக அமெரிக்காவில் நடைபெறும் மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக் 2022 பட்டத்துக்கான பங்கேற்க உள்ளேன்.
நினைப்பதை செய்ய வேண்டும்: தமிழ்நாட்டில் நிறைய பெண்கள் திருமணம் முடிந்துவிட்டால், எல்லாம் முடிந்துவிட்டது என நினைக்கிறார்கள்; வீட்டைத் தாண்டி வெளியில் வந்து வேலை செய்பவர்கள் குறைவானவர்களாக இருந்தார்கள். ஆனால், தற்போது அதிகரித்து வருகிறது. பெண்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அவர்கள் நினைத்ததை செய்ய முன் வரவேண்டும். மிஸ் இந்தியாவில் மட்டும் தான் பங்கேற்க வேண்டும் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. திருமணம் ஆனாலும், மிஸஸ் இந்தியாவில் பங்கேற்று வெற்றி பெறலாம்' இவ்வாறு கூறினார்.
இவர் கடந்த ஆண்டு மிஸஸ் இந்தியா பட்டம் வென்றவர். கடந்த ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக் அழகிப் போட்டியில் பங்கேற்றார். மொத்தமாக 3000 பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் இவர் தேர்வு ஆகினார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 2021ஆம் ஆண்டுக்கான மிஸஸ் இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக் பட்டத்தையும் இவர் வென்றார்.
இதையும் படிங்க: அடுத்த பிசிசிஐ தலைவர் யார்..? களமிறங்கும் பிரபலங்களின் வாரிசுகள்...