சென்னை: தேசிய மற்றும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அரசுத் துறை அலுவலர்களுக்கு வெள்ள அபாயம் குறித்த விழிப்புணர்வினையும் ஒத்திகைப் பயிற்சியினையும் இன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தியது.
இந்த ஒத்திகை பயிற்சியின் ஒரு அங்கமாக, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கை VHF தொலைத்தொடர்பு கருவிகள் மூலமாக தெரிவிக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை வரப்பெற்றவுடன் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் மீட்புப்படையின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து, பாதிப்பிற்கு உள்ளாகக் கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.
அங்கு அவர்களுக்குத்தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் இருந்தன. பின்னர் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
இந்த ஒத்திகைப்பயிற்சியின் மூலம் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் காலங்களில் இணைந்து செயல்படும் முக்கிய துறைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் தயார் நிலை மதிப்பீடு செய்யப்பட்டதோடு பேரிடர் நிகழ்வு, மீட்பு அமைப்பின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதனால் மாநில மற்றும் மாவட்ட அளவில் பேரிடர் கால அவசர நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கைகள் பற்றி அறிந்து கொள்ளப்பட்டது. அது போக மீட்பு, தேடல், நிவாரண நடவடிக்கைகள், உபகரணங்கள் மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றின் முக்கியத்துவமும், பேரிடர் மேலாண்மையில் முதல் நிலை மீட்பாளர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் தன்னார்வலர்களது பங்கு ஆகியவற்றையும் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில், கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், தலைமையில் இந்த ஒத்திகை நடைபெற்றது.
இப்பயிற்சியில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரிகேடியர் தாக்கர், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை இயக்குநர் சி.அ.ராமன், தேசிய பேரிடர் மீட்புப் படை, தமிழ்நாடு பேரிடர் படை, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினை சார்ந்த அலுவலர்களும், பேரிடர் மேலாண்மையில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய துறைகளைச் சார்ந்த அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட சிவப்புக்கம்பள வரவேற்பா?... யோகியின் புதிய சர்ச்சை