சென்னை: நீலம் நிதிநல்கைக்கு ('Neelam Fellowship 2021') விண்ணப்பித்து ஆய்வுத்திட்டம் அனுப்பிய மொத்தம் 21 பேரில் 5 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேருக்கும் ஆய்வுக்கான நிதி உதவி 75ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படவுள்ளது.
பேராசிரியர் சி.லட்சுமணன், ஆய்வாளர் வ.கீதா, பேராசிரியர் இரா.அழகரசன் மற்றும் எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் ஆகியோர் நடுவர்களாக இருந்து அவ்விண்ணப்பங்களை இரண்டு கட்டங்களாகப் பரிசீலித்துத் தேர்வு செய்துள்ளனர்.
'சித்தூர் தென்கரை மகாராஜா சாஸ்தா கோயிலும் அதன் பின்னால் இருக்கின்ற சாதிய கட்டமைப்புகளும்' என்ற ஆய்வுக் கட்டுரைக்காக மு.கார்த்திக்கும், 'அருந்ததியர்களின் தோல் தொழிற்நுட்பம் வரலாற்றுப் பார்வை' என்ற ஆய்வு கட்டுரைக்காக மா. காமாட்சிக்கும் நிதி உதவி கிடைத்துள்ளது.
ஆய்வுக்கட்டுரை எழுதிய ஐந்து பேருக்கு நிதி உதவி
மேலும், 'பெளத்த பெரியார் மு.சுந்தரராசனார் வாழ்க்கை வரலாறு குறித்து எழுதிய ஜே. கோகுல்நாத் என்றவருக்கும், தலித் ஞானசேகரன் வாழ்வின் ஊடாக தலித் விடுதலைக்கான பயணம் குறித்து எழுதிய பீம்ராவ் சாக்யாவுக்கும், 'தஞ்சை நிலவுடைமை ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில் தலித்துகளின் பங்கு' என்ற கட்டுரைக்காக திருக்குமரன் கணேசன் ஆகிய ஐந்து பேருக்கும் நீலம் நிதிநல்கை சார்பில் நிதி உதவியும், பாராட்டும் கிடைத்துள்ளது.
இந்தாண்டு விண்ணப்பித்து கிடைக்கப் பெறாதவர்களும் மீண்டும் அடுத்த ஆண்டு விண்ணப்பிக்கலாம் என நீலம் நிதிநல்கை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்க வேண்டும்