சென்னை : சென்னை அம்பத்தூர் பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வளையாபதி (58). இவருக்கு ஆவடியை அடுத்த போத்தனூர் கிராமத்தில் 2,400 சதுர அடி கொண்ட வீட்டுமனை உள்ளது.
இந்நிலையில் வளையாபதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது நிலத்தை சிலர் அபகரித்துக் கொண்டதாக புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவில் உள்ள நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில் கடந்த 1994 ஆம் ஆண்டு வளையாபதி கிரையம் பெற்ற வீட்டுமனையை கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த நிலத்தின் உரிமையாளர்போல் ஆள்மாறாட்டம் செய்து போலி அடையாள ஆவணங்கள் மூலம் 2,400 சதுர அடி கொண்ட நிலைத்தை 800 சதுர அடி வீதம் 3 ஆகப் பிரித்து பத்திரப் பதிவு செய்து விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் தனிப்படை அமைத்து நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்ட போத்தனூர் பகுதியைச் சேர்ந்த மேகநாதன் (36), அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த போஸ் (46), சுரேஷ் (45), திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த நந்த குமார் (50), போரூர் பகுதியைச் சேர்ந்த முகமது ஷரீஃப் (38) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க : ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் அபகரிப்பு: 7 பேர் கைது