தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்த சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியில் 200 கோடி மதிப்பீட்டில் சிறு துறைமுகம் அமைக்கும் பணிக்காக அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார். இதில், மீன்வளத் துறை இயக்குநர் சமீரன், சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அதன்பிற்கு விழாவில் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ”இந்த பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைவதன் மூலம் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் நேரடியாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கும், மறைமுகமாக இருபத்தைந்தாயிரம் மேற்பட்டோருக்கும் வேலைவாய்ப்பு உருவாக வழிவகை செய்துள்ளோம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்த பணி நிறைவுபெறும்” என்றார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் செய்து 8,330 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு கொண்டுவந்துள்ளார். எனவே ஸ்டாலின் சொன்னதுபோல் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவார் என்று நம்புகிறோம். அப்படி செய்தால் அது ஆரோக்கிய அரசியல்.
1996இல் திமுக தலைவராக இருந்த கருணாநிதி சிங்கப்பூர் சென்றார். அப்போது அவர் சொந்த விஷயத்திற்காகச் சென்றார். நாங்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்காகச் சென்றோம். அதைப்போல் திமுக தலைவர் ஸ்டாலினும் பல நாடுகளுக்குச் சென்றார். அப்போது எந்த விஷயத்திற்காகச் சென்றார், எந்தெந்த நிறுவனங்களைச் சந்தித்து எவ்வளவு முதலீடுகளை பெற்றார் என்பது போன்ற அறிக்கைகளை அவர் கொடுக்க வேண்டும்” என்றார்.