மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு நாள்தோறும் 500 ரூபாய் வீதம் நிவாரண உதவி வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, முராரி கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் பீட்டர்ராயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்துவது, புயலில் சேதமடைந்த பெசன்ட் நகர் லூப் சாலையை புனரமைப்பது, மீன் கடைகளை ஒழுங்குப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று (ஜன.8) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மவுரியா, “மீன்பிடித் தடைகாலத்தில் வழங்கப்படும் மானியத் தொகையை உயர்த்த கோரியும், முராரி கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தக் கோரியும் இந்த வழக்கு கடந்த 2015ஆம் ஆண்டு தொடரப்பட்டது. ஆனால், இவ்வழக்கின் பிரதான கோரிக்கையை விடுத்து மெரினா கடற்கரையை அழுகுப்படுத்துவதும், லூப் சாலை சீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இதுவரை நீதிமன்றம் பிரதான கோரிக்கையை கருத்தில் கொள்ளவில்லை” என தெரிவித்தார்.
இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “சென்னை மெரினா கடற்கரையை அழகுப்படுத்துவது அவசியம் என்றாலும், அதை விட மீனவர்களின் நலன், அவர்களின் மனித உரிமைகளுமே முக்கியம். மெரினாவில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் 900 தள்ளுவண்டிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கக் கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என கருத்து தெரிவித்து விசாரணையை பொங்கல் விடுமுறைக்குப் பின் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க : வங்கி ஊழியரிடம் தாலிச் சங்கிலி பறிப்பு: தாம்பரம் காவல் துறை விசாரணை!