சென்னை: பள்ளிக் கல்வித் துறை வளாகத்திலுள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக கட்டடத்தில் பேரிடர் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து எவ்வாறு தப்பித்துக்கொள்ளலாம் என்பதற்கான ஒத்திகை நடைபெற்றது.
தீ விபத்து பாதுகாப்பு நிகழ்ச்சி
தீயணைப்புத் துறை மூலம் தீ விபத்து ஏற்பட்டால் ஊழியர்கள் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்பது குறித்தும் அந்த ஒத்திகையில் செய்து காண்பிக்கப்பட்டது மேலும், தீயணைப்பு கருவிகளை ஊழியர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட்டது.
தீ விபத்து பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் மற்றும் பணிகள் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, மேலாண்மை இயக்குநர் மணிகண்டன், உறுப்பினர் செயலாளர் நாகராஜன் முருகன் உள்ளிட்ட அலுவலர்களும் ஊழியர்களும் பார்வையிட்டு தெரிந்துகொண்டனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்த ஒத்திகையின்போது ‘வரும் முன் காப்போம்’ என்ற அடிப்படையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும், எப்படி பாதுகாப்புடன் தப்பிக்க வேண்டும் என்பதை அலுவலர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ராட்சத கிரேனுடன் வந்த தீயணைப்பு வீரர்கள் அங்குள்ள 10 மாடி கட்டடத்தின் ஆறாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது போலவும் அதிலிருந்து அலுவலர்களை பாதுகாப்புடன் மீட்டு கொண்டு வருவது போலவும் செய்து காட்டினர்.
கும்பகோணம் தீ விபத்து
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் ஐ.லியோனி, “தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பேரிடர் காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது.
கும்பகோணம் பள்ளி தீ விபத்து ஏற்பட்ட பின்னரே அனைத்து பள்ளி கட்டடங்களும் கான்கிரீட் தளம் மூலம் செயல்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதேபோல், பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையின் மூலம் மாணவி ஒருவர் கீழே விழுந்த பின்னர் அனைத்து பேருந்துகளும் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்க வேண்டும் என அரசு உத்தரவிட்டது.
தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு சொந்தமான கிடங்குகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இவைகள் தீ விபத்து ஏற்பட்டால் சேதாரம் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்
எனவே தமிழ்நாடு முழுவதும் உள்ள பாடநூல் கழகத்திற்குச் சொந்தமான கிடங்குகளில் இதேபோன்று விழிப்புணர்வு செய்யப்படும். பாடநூல் கழகத்திற்குச் சொந்தமான அனைத்து கட்டடங்களும் தீ விபத்து நேரிட்டால் பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படும் .
பாடநூல் கழக அலுவலகத்தில் ஒன்றிய, மாநில அரசிற்குச் சொந்தமான அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்த அலுவலகங்களுக்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்கின்றனர். எனவே அவர்களுக்குத் தேவையான கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு தமிழ்வழிப் பாடநூல் - திண்டுக்கல் ஐ. லியோனி