சென்னை ராயப்பேட்டை சுபேதார் உசேன் தெருவைச் சேர்ந்தவர் ஜீவா (58). இவர் அதே பகுதியில் கடந்த 30 வருடங்களாக இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்திவருகிறார்.
நேற்று வழக்கம்போல் வேலை முடிந்ததும், கடையை மூடிவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணியளவில் மின்கசிவு காரணமாக கடையில் உள்ள பொருள்கள் தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனே தீயணைப்புத் துறைக்குத் தகவலளித்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் எழும்பூர், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை பகுதியிலுள்ள தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. பின்னர் 14 தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் சுமார் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமாகியுள்ளன. அதிருஷ்டவசமாக எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்தத் தீ விபத்து தொடர்பாக அண்ணாசாலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றார்.
இதையும் படிங்க:
உரக்கடையில் தீ விபத்து: 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் நாசம்