சென்னை முகப்பேர் சாலையில் தமிழ்நாடு ஐபிஎஸ் அலுவலர்கள் சங்கத் தலைவரும், ஐஜியுமான மகேந்திரன் வீடு உள்ளது. நேற்று, அவர் வீட்டின் வளாகத்தில் காய்ந்த நிலையில் இருந்த தென்னை மரத்தின் கீற்று அருகில் சென்ற மின்சார வயரில் உரசியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மரம் நன்றாக காய்ந்து இருந்ததால் தீ மளமளவென மரத்தில் பற்றியெரியத் தொடங்கியுள்ளது.
இது பற்றி தீயணைப்புத் துறையினருக்கும் நொளம்பூர் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஜே.ஜே. தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். ஆனால், மின்னிணைப்பு துண்டிக்கபடாததால் தீயணைப்பு வீரர்களால் தீயை அணைக்க முடியவில்லை. பின்னர், மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு மின்னிணைப்பு துண்டிக்கபட்டு தீ அணைக்கப்பட்டது.