சென்னை: கோடம்பாக்கம் பரதீஸ்வரர் காலனி பிரதான சாலையில் பார்த்திபன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் உன்னிகிருஷ்ணன் என்ற நபர் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஃபாஸ்ட் புட் கடை வைத்து நடத்திவருகிறார்.
நேற்று (ஆக. 6) மாலை ஃபாஸ்ட் புட் கடையில் ஊழியர்கள் வழக்கம்போல் பணிபுரிந்துவந்தனர். கடைக்கு வெளியே புரோட்டா போடுவதற்காக வைத்திருந்த எரிவாயு உருளையை புரோட்டா மாஸ்டர் தீபக் பற்றவைத்தபோது திடீரென தீப்பற்றி எரிந்தது.
ஏற்கெனவே எரிவாயு கசிவு ஏற்பட்டு கடை முழுவதும் பரவியிருந்ததால் மளமளவென தீ பரவியது. இது குறித்து அருகிலிருந்த நபர்கள் தகவல் அளித்ததன்பேரில் அசோக் நகர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.
இந்தத் தீ விபத்தில் தீபக் படுகாயம் அடைந்த நிலையில் ஜெய்னுல், நாகராஜன், பழனியாண்டி, சோட்டா ஆகிய ஊழியர்கள் காயமடைந்தனர்.
தீக்காயமடைந்த ஐந்து பேரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வடபழனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கடன் பிரச்சினைக்குத் தீர்வு இதுவல்ல - நால்வர் தற்கொலை உணர்த்தும் பாடம்