சென்னை: கீழ்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் 7வது தளத்தில் வசித்து வருபவர் அனுராதாமுரளி(54). இவரது வீட்டில் கடந்த ஒரு மாதமாக பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (டிசம்பர் 29) மதியம் அனுராதா வீட்டில் ஏசி இயந்திரம் வெல்டிங் பணியில் வடமாநில தொழிலாளர்கள் 7 பேர் ஈடுபட்டிருந்தனர்.
படுகாயமடைந்த தொழிலாளர்கள்
அப்போது ஏசி இயந்திரம் பொருத்துவதற்காக வெல்டிங் செய்த போது, எதிர்பாராத விதமாக கேஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சிக்கி வட மாநிலத்தைச் சேர்ந்த அக்தர்அலி(28), அமித்(28), ரியாஸ்சுதின்(48), சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேர் காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், கீழ்பாக்கம் காவல் துறையினர் ஆகியோர், படுகாயமடைந்த ஐந்து பேரை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் படுகாயமடைந்த ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார். மற்ற நான்கு பேருக்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து கீழ்பாக்கம் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து வீட்டு உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தீவிர குற்றங்களை தடுக்க சென்னை காவல் துறையில் புதுப் பிரிவு உருவாக்கம்