நாட்டின் பொருளாதார மந்த நிலை ஒரு சுழற்சியில் சிக்கிக்கொண்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதனை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் பொருளாதார பிரச்னையில் இருந்து மீண்டு, வளர்ச்சிப் பாதைக்குச் செல்ல மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பெரு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அரசின் இந்த நடவடிக்கை பலன் தருமா என்பது குறித்து வல்லுநர்கள் கூறும் கருத்தைப் பார்ப்போம்.
37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை தொடர்பாக பல்வேறு துறையினரிடமும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வரும் ஆட்டோமொபைல் துறைக்கும், பிஸ்கெட் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற 37ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இவற்றுக்கான வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த துறைகள் தொடர்பாக எந்த பெரிய அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பு நடவடிக்கையால் ஆட்டோமொபைல் துறை பலன் பெறும். இருப்பினும் நாட்டு மக்களின் வாங்கும் திறன் குறைந்து தேவை குறைந்ததே பொருளாதார மந்த நிலைக்கு முக்கியக் காரணம் என்றும்; அதனைச் சரி செய்ய மத்திய அரசு தேவையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் இடதுசாரிகள்.
பொருளாதார மந்த நிலைக்கு ஜிஎஸ்டியே காரணம்; மன்மோகன்சிங் குற்றச்சாட்டு
இடதுசாரிகள் பார்வையில் நிதியமைச்சரின் அறிவிப்புகள்
இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ், 'மத்திய அரசு வேலைவாய்ப்பு, விவசாயத்துறை நெருக்கடி, வளர்ச்சி விகிதம் குறைவு போன்ற அடிப்படை பிரச்னைகளை பற்றிக் கவலைகொள்ளாமல், பங்குச் சந்தையும், பெரு நிறுவனங்களையும் பற்றியே சிந்திப்பதாகக் குற்றம்சாட்டினார். பெரு நிறுவனங்களுக்கான சலுகைகள் பொருளாதாரத்தை மேம்படுத்தப் போவதில்லை'என்றார்.
மேலும் பேசிய அவர், 'பெரு நிறுவன வரி அதிகமாக இருப்பாதல்தான், ஐந்து ரூபாய் பிஸ்கெட்கள் விற்பனை ஆகவில்லையா?' என்று கேள்வி எழுப்பிய அவர், 'சாதாரண மக்களின் வாங்கும் திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்திய அரசோ அது பற்றிக் கவலைப்படவில்லை. கடந்த ஓராண்டில் 225 நூற்பாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் பழுதாகிக்கொண்டிருக்கின்றன' என்றார்.
"வெட்கிரைண்டர்களுக்கான வரிக்குறைப்பு" - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
தொடர்ந்து பேசியவர்,'ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு மேல் வேலை இழந்ததாக தொழில்துறையினர் கூறுகின்றனர். ஆட்டோமொபைல், ஆடை துறை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. பெரு நிறுவனங்களுக்கு அள்ளிக்கொடுத்தால் நாட்டில் வேலைவாய்ப்பு பெருகி பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று மத்திய அரசு நம்புகிறது. ஆனால் இது மிகவும் தவறான பார்வை' என்றார்.
தொழில் துறையினரின் பார்வையில்...
அதேநேரத்தில் மத்திய அரசின் அறிவிப்புகளை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய ஹிந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ராஜேந்திர குமார், 'மத்திய அரசின் இந்த புதிய அறிவிப்புகள் நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சி என்றும், இதனால் நாட்டில் நுகர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், தொழில் துறைக்கு அரசு அளிக்கும் சலுகைகளை என்றுமே வரவேற்போம் என்றும் தெரிவித்தார்.
மேலும், ’நுகர்வு அதிகரித்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு வேலைவாய்ப்புகள் பெருகும். இந்த சலுகைகளை முறையாக அமல்படுத்த வேண்டும்’ எனவும் கேட்டுக்கொண்டார். ’பெரு நிறுவனங்களுக்குச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதைப் போல சிறு, குறு, நிறுவனங்களுக்கும் சலுகைகள் வழங்க வேண்டும்’ என்றும் அவர் வலியுறுத்தினார்.
2 கோடி ரூபாய்க்குக் கீழ் வருவாய் ஈட்டும் நிறுவனங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி வரித்தாக்கல் செய்வது கட்டாயமில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளதை வரவேற்றுள்ள அவர், ஆனால் இந்த அறிவிப்புகள் முன்னரே வெளியிட்டிருக்க வேண்டும் என்றார்.