சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடந்தபோது புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, இந்து அறநிலைத்துறை அப்போதைய கூடுதல் ஆணையர் திருமகள், முத்தையா ஸ்தபதி உள்ளிட்ட ஏழு பேர் மீது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு ரத்து செய்ய கோரி திருமகள், முத்தையா ஸ்தபதி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.
விசாரணையின் போது, மனுதாரர்கள் சார்பில், இது காலம் கடந்த ஜோடிக்கப்பட்ட வழக்கு என்றும், தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்திற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.
சிலை கடத்தல் தடுப்பு போலீசார் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி,"இந்த வழக்கில் போதுமான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. இதுகுறித்த விசராணையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் சாட்சியம் உள்ளது. குற்றப்பத்திரிகை தயாராக உள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது" என வாதிட்டார்.
இந்த வழக்கில், இன்று (ஜூலை 22) தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை நான்கு மாதத்திற்குள் முடித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் வழக்கு ரத்தாகிவிடும் என்றும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக அலுவலக வன்முறை வழக்கு: காவல்துறை பதிலளிக்கும் வரை கைது நடவடிக்கை கூடாது என உத்தரவு