தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் 3 வாக்கு பதிவு இயந்திரங்கள், 1 விவிபேட் எடுத்து சென்றது சர்ச்சையை கிளப்பியது.இந்த விவகாரம் தொடர்பாக 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வேளச்சேரியில் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லப்பட்டது முழுக்க முழுக்க விதி மீறல், இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிட வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
மறுவாக்குப்பதிவு என்பது தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இருசக்கரவாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 3 வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒரு விவிபேட் இயந்திரம் 50 நிமிடம் மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதில் 15 ஓட்டுக்கள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை 50 நிமிடத்துக்கு மேல் ஏன் பயன்படுத்தவில்லை என்று அன்றைய தினத்தில் பணியில் இருந்த தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் சத்ய பிரத சாகு தெரிவித்தார்.