சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் சம்பா பயிர் நடவுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தாண்டு 13.168 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் நடவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நடவுப்பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதால் உரங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை உயர்வு, தட்டுப்பாடு உள்ளிட்ட உரங்கள் விற்பனைத் தொடர்பாக ஏற்படும் இடர்பாடுகளை களைவதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தில் உரக்கண்காணிப்பு மையம் செயல்படுகிறது.
தனியார் உரக்கடைகள் ஆய்வு
உரக் கண்காணிப்பு மையத்திற்கு வரும் உரம் தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக நேற்று (அக். 8) தமிழ்நாடு முழுவதும் 3,391 தனியார் உரக் கடைகளில் உரம் இருப்பு, விலை, இருப்பு பட்டியல் முதலான பணிகள் குறித்து வேளாண்மை துறையினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விற்பனை, உண்மை இருப்பு ஆகியவற்றில் வித்தியாசம் காணப்பட்ட 84 உரக்கடை உரிமையாளர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. உரம் இருப்பு, விற்பனை விலை குறித்த தகவல் பலகை பராமரிக்காத ஆறு உரக்கடைகள் மீது எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
உரிமம் ரத்துசெய்யப்படும்
மேலும், கணக்கில் வராத கூடுதலாக உரம் இருப்பு வைத்துள்ள உரக்கடை உரிமையாளர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மானிய உரங்களை விற்பனை முனைய கருவியில் பட்டியலிடப்பட்டு, விற்பனை செய்யாத ஒரு உரக்கடை மீது mFMS குறியீட்டு எண் தடை செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும். அரசின் வழிகாட்டுதல் முறைகளின்படி உரங்களை விற்பனை முனைய கருவியின் மூலம் விவசாயியின் ஆதார் எண்ணையும் பயன்படுத்தி உரக்கடை உரிமையாளர்கள் விற்பனை செய்யப்பட வேண்டும். நிர்ணயம் செய்த விலையில் உரங்களை விற்பனை செய்யாத உரக்கடை உரிமையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு சம்பா பருவத்திற்கு தேவையான உரங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட உரக்கடைகள் வேளாண்மைத்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு