7.5% இட ஒதுக்கீடு அரசுப்பள்ளி மாணவர்களுக்கான முதல் நாள் கலந்தாய்வான நேற்று, எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு மருத்துவக்கல்லூரியை 224 மாணவர்களும், 4 மாணவர்கள் தனியார் மருத்துவக்கல்லூரியையும் தேர்வு செய்துள்ளனர். 7 மாணவர்கள் அரசு பல்மருத்துவக் கல்லூரியில் இடங்களை தேர்வு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 3 இடங்கள், 14 தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிப்பில் 82 இடங்கள், ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியில் 5 இடங்கள், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 3 லட்சத்து 85 ஆயிரம் முதல் 4 லட்சம் வரையில் கட்டணம் வசூலிக்கலாம் என கல்விக்கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 12 லட்சத்து 50 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கலந்தாய்வின் போது தேர்வு செய்த தனியார் கல்லூரி கட்டணத்தை கேட்டவுடன் அரசுப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தங்களால் இந்தளவு கட்டணம் செலுத்த முடியாது என்றும், எனவே காத்திருப்போர் பட்டியலில் வைக்க கூறிவிட்டு சென்றனர். இதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இந்நிலையில், இன்று கலந்தாய்வு நடக்கும் இடத்திற்கு வந்த ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள், கல்விக் கட்டணத்திற்கு உரிய விண்ணப்பங்களை மாணவர்களிடம் கலந்தாய்வு அறையிலேயே அளித்து பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டனர். மேலும், மாணவர்கள் கட்டணங்கள் எதையும் செலுத்த தேவையில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். இடங்களை தேர்வு செய்தனர்.
இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் ரூ.16 லட்சம் மதிப்பிலான புரஜெக்டர்கள் திருட்டு!