சென்னை: விவசாய பெருமக்களின் துயர் துடைப்பதற்காக வரலாற்று சிறப்புமிக்க கடன் தள்ளுபடி அறிவிப்பினை வெளியிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு பல்வேறு விவசாய சங்கங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமியை நேற்று (பிப். 6) அவருடைய அலுவலகத்தில், தமிழ்நாடு காவிரி பாசன விவசாயிகள் நலச் சங்கத்தின் பொதுச்செயலாளர் காவிரி எஸ்.ரங்கநாதன், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி டெல்டா விவசாயிகள் குழுமத்தின் பொதுச்செயலாளர் டெல்டா வி.சத்யநாராயணன் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சந்தித்து, மலர்க்கொத்து வழங்கி நன்றியினை தெரிவித்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவைக் கூட்டத்தில், தமிழ்நாடு சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.