சென்னை: சென்னை புதுப்பேட்டை பச்சையப்பன் முதலி தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல். இவரது இரண்டாவது மனைவி ஜெயந்தி (38). இவர்களது மகள்கள் ஐஸ்வர்யா (6), பூஜாஸ்ரீ (4). குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஞானவேல் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து மனைவி மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இதேபோல் கடந்த 15ஆம் தேதி பொங்கல் அன்று மது அருந்திவிட்டு வந்த ஞானவேல் வழக்கம்போல் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே கைகலப்பு ஏற்பட்டது.
காணாமல்போன கணவன்
இதில் ஆத்திரமடைந்த ஞானவேல் தனது குழந்தைகள் ஐஸ்வர்யா, பூஜாஸ்ரீ ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வேளச்சேரியில் உள்ள தனது உறவினர் அன்பழகன் வீட்டிற்குச் சென்றுள்ளார். மறுநாள் வரை குழந்தைகளுடன் சென்ற ஞானவேல் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த ஜெயந்தி கணவரை செல்போனில் தொடர்புகொண்டு கேட்டார்.
அப்போது, வேளச்சேரியில் நண்பர் வீட்டில் இருப்பதாகவும், வீட்டிற்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஞானவேல் கூறியதுபோல் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த ஜெயந்தி அவரது நண்பரைத் தொடர்புகொண்டு கேட்டபோது ஞானவேல் குழந்தைகளுடன் வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால் ஞானவேல் கூறியதுபோல் நேற்றுவரை வீடு திரும்பாததால் ஜெயந்தி காணாமல்போன கணவர், குழந்தைகளைக் கண்டுபிடித்துத் தருமாறு எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஞானவேல், இரண்டு குழந்தைகளைத் தேடிவந்தனர்.
குழந்தைகளைக் கட்டி அணைத்தவாறு தற்கொலை
இந்நிலையில் இன்று காலை மறைமலைநகர் அருகே உள்ள கிணற்றில் இரண்டு குழந்தைகளுடன் இளைஞர் ஒருவர் இறந்துகிடப்பதாக அப்பகுதி மக்கள் மறைமலைநகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்துகிடந்த நபர், குழந்தைகளின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் உயிரிழந்த நபர் எழும்பூரில் காணாமல்போனதாகப் புகாரில் தேடப்பட்டுவந்த ஆட்டோ ஓட்டுநர் ஞானவேல், அவரது குழந்தைகள் எனத் தெரியவந்தது.
மேலும் குடும்பத் தகராறில் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வந்த ஞானவேல் தனது இரண்டு குழந்தைகளுடன் கட்டி அணைத்தவாறு கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மறைமலைநகர் காவல் துறையினர் இது குறித்து எழும்பூர் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.
பேரதிர்ச்சி
இதன்பேரில் எழும்பூர் காவல் துறையினர் ஞானவேலின் மனைவி ஜெயந்தியை சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். குழந்தைகளுடன் கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஜெயந்திக்குப் பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய காவல் ஆணையம் - ஸ்டாலின் உத்தரவு