கடந்த சில தினங்களுக்குமுன் கோயம்பேடு சந்தை வியாபாரிகள் 400 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது என ஒரு தனியார் தொலைக்காட்சி பொய்யான செய்தி வெளியிட்டதால், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் இன்று (ஏப். 28) சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சிஎம்டிஎ) அலுவலகத்தின்முன் கூடி செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
'கோயம்பேடு சந்தை வளாகத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வார்டு ஒன்று உள்ளது. இதில், 45 வயதுக்கு மேற்பட்ட வியாபாரிகள் தினந்தோறும் தடுப்பூசி போட்டுக்கொள்கிறார்கள். மேலும், 29 பேருக்கு கரோனா தொற்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் தொலைகாட்சி ஒன்று 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது என செய்தி வெளியிட்டிருப்பது வருத்தமளிக்கிறது' என்றனர்.
இதுகுறித்து, கோயம்பேடு சந்தை அண்ணா பொதுநல சங்கம் கூறுகையில், ‘கடந்த வருடம் எட்டு மாதங்களாக கரோனா பெருந்தொற்றால் வியாபாரமின்றி எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. எனவே இந்த மாதிரி தவறான செய்திகள் மறுபடியும் எங்களது வாழ்வாதாரத்தை பெரிதும் பாதிக்கும். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்' என செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.