சென்னை: போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், மருத்துவராகப்பணிபுரிந்து வருபவர், செல்வக்குமார்(62). இவர் ஆவடி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தான் ஏமாற்றப்பட்டதாகவும், தன்னை ஏமாற்றிப் பணம் பறித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் எனவும் புகார் ஒன்றை அளித்தார்.
அவர் அளித்த புகாரில், “போரூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற நான், அங்கு டாக்டராக பணிபுரிந்து வருகிறேன். எனது நண்பர்கள் மூலம் சேலத்தைச் சேர்ந்த சசிகுமார்(46) என்பவரோடு பழக்கம் ஏற்பட்டது.
சசிகுமார், தன்னை ஐஏஎஸ் அலுவலர் என்று கூறிக்கொண்டு, என்னை அகில இந்திய மருத்துவ கவுன்சில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடலாம் என ஆசை காட்டியதுடன், அதனை தானே பெற்றுத் தருவதாகவும் கூறினார். இதனை நம்பிய நான், 3 தவணையாக கல்லூரி வளாகத்தில் வைத்து சுமார் ரூ.70 லட்சம் வரை அவரிடம் கொடுத்தேன்.
ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட அவர், இதுவரை பதவியை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். நான் கொடுத்த பணத்தையும் திரும்ப தராமல் ஏமாற்றி வருகிறார். எனது செல்போன் அழைப்புகளையும் சசிகுமார் ஏற்பது இல்லை. அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எனது பணத்தை பெற்றுத்தர வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்தப் புகார் போரூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில், போரூர் காவல் துறையினர் தனிப்படை அமைத்து பண மோசடியில் ஈடுபட்ட சசிகுமாரை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், சேலத்திலிருந்த சசிகுமாரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். அதில் சசிகுமார் வக்கீல் என்பதும், அவர் ஐஏஎஸ் அலுவலர் போல் நடித்து மருத்துவர் செல்வகுமாரிடம் பணம் மோசடி செய்ததும் தெரிந்தது.
மேலும் அவர், காவலராகப் பணிபுரிந்து, மோசடிப் புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சசிகுமாரிடம் இருந்து போலி ஆட்சியர் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியின் அண்ணனுக்கு கத்திக்குத்து