அதிரடிப்படை நிலை என்ன?- சென்னை உயர் நீதிமன்றம் - அந்த உத்தரவை அமல்படுத்தாமல் இருந்தது
அரசு நிலங்களை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடிப்படை அமைக்கும்படி, 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
சென்னை: அரசு நிலங்களை கண்டறியவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிரடிப்படை அமைக்கும்படி, 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருப்பது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
நிலுவையில் உள்ள வழக்கு
சென்னை எழும்பூரில் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள தனியார் கட்டடம், திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி, அதை சீல் வைக்கவும், அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை இடிக்கவும் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இதை எதிர்த்து அந்தக் கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ள எஸ் பிளஸ் மீடியா என்ற நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் நக்கீரன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து அரசுக்கு மேல் முறையீடு செய்துள்ளதாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேல் முறையீட்டு விண்ணப்பம் அரசிடம் நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அந்த மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலனைக்கு எடுத்து, மனுதாரர் தரப்பு விளக்கமளிக்க அவகாசம் அளித்து மூன்று மாதங்களில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.
அதிரடிப்படையின் நிலை
மேலும், அரசு நிலங்களை ஆய்வு செய்து, எல்லைகளை வரையறுக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் அதிரடிப்படை அமைக்கும்படி, 2019ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை மேற்கோள்காட்டிய நீதிபதிகள், அந்த உத்தரவின்படி அதிரடிப்படை அமைக்கப்பட்டதாக தெரியவில்லை எனவும் தெரிவித்தனர்.
அந்த உத்தரவை வேண்டுமென்றே அமல்படுத்தாமல் இருந்தது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எதிராக கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க:STR New Year Wish 2022: `உங்களில் ஒருவன் - சிலம்பரசன் புத்தாண்டு வாழ்த்து