சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கப் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத், இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, "நாடு முழுவதும் கரோனாவின் இரண்டாவது அலை பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிப்பது ஏன்? மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், கரோனா தடுப்பூசிக்கென அறிவிக்கப்பட்ட ரூ.35,000 கோடி யாருக்கானது?
ஏறத்தாழ 6 கோடி தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது இந்திய மக்களுக்கு வழங்கப்பட்டதைவிட, இரண்டு மடங்காகும். நம் நாட்டு மக்களுக்கே தடுப்பூசி போதுமான அளவு இல்லாத போது, 72 நாடுகளுக்கு 6.5 கோடி தவணை தடுப்பூசிகளை வழங்கியது, இந்திய மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.
தமிழக அரசு தனது ஆணையையே மீறி, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் பழைய கட்டணத்தையே மீண்டும் கட்டாயப்படுத்தி வசூலிப்பதை உடனடியாக கைவிட வேண்டும். அகில இந்தியத் தொகுப்பிற்கு தமிழக அரசு வழங்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இட ஒதுக்கீட்டை வழங்கிட வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தாமல், மத்திய அரசு இழுத்தடிப்பது சமூக நீதிக்கு எதிரானது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 35 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு