விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், ”மனு நூல் என்பது தடை செய்யப்பட வேண்டிய ஒன்று” என முன்னதாக தெரிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசியல் களத்தில் மனு நூல் குறித்த பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்தும், தங்களது கொள்கை ரீதியான முடிவுகள் குறித்தும் நமது ஈடிவி பாரத்திற்கு தொல்.திருமாவளவன் சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அவருடன் நடைபெற்ற கலந்துரையாடல் பின்வருமாறு :
கேள்வி : மனு நூலை அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள் எதிர்த்த அதே காலகட்டத்தில் தான் நாம் தற்போது உள்ளோமா?
பதில் : எல்லா மதங்களிலும் சமூக மரபு என்பது ஒன்று உள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் என்பது 1950ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தாலும், ஒவ்வொரு குலம், சாதி, பாரம்பரிய, குடும்பப் பழக்கம் என சிலவற்றை நாம் கடைப்பிடித்து வருகிறோம். இவை எல்லா மதங்களிலும் உள்ளன. சாதிகளுக்குள் திருமணம் வேறுபாடுகள் உள்ளன. இவை அனைத்தையும் மேலாதிக்கம் செய்யக்கூடிய ஒன்று ’மனு நீதியின் தாக்கம்’ என்பது தான்.
இப்படிப்பட்ட சமூக மரபு, மனு நூலால் தான் உருவானது. இளவரசன் ஆணவப் படுகொலை, ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை போன்ற சம்பவங்கள் இன்றும் நடைபெற்று வருவதே இதற்கு சான்று.
நான் மனு நூல் பற்றி திடீரெனப் பேச வேண்டும் என்று பேசவில்லை. காலம் காலமாக நான் இது குறித்து பேசி வருகிறேன். மனு நூலில் இருப்பதைதான் நான் சொன்னேன். ஆனால் அதனைத் திரித்து பாஜக தேர்தல் நோக்கத்திற்காக கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. என்னை ’இந்து விரோதி’ என்று கூறுவதன் மூலம் திமுக கூட்டணியே இந்து விரோதக் கூட்டணி என்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
கேள்வி : தேர்தலை விட மனு நூலை எதிர்த்துப் போராட வேண்டிய தேவை உள்ளது என்று நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். அந்த அளவுக்கு மனு நூலை ஏன் தற்போது எதிர்க்க வேண்டும்?
பதில் : தலைமுறை தலைமுறையாக இருக்கும் ஒடுக்குமுறை மனு நூல் மூலம் ஏற்பட்ட ஒன்று. இதை வெறும் கருத்தியலாகப் பார்க்க முடியாது. நான் மேலோட்டமாக சில நூல்களைப் படித்து கருத்து சொல்லவில்லை. இதற்கு பல உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் உள்ளன. உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் மனுவை குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுவின் சிலை உள்ளது. இதை எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
கேள்வி : அரசியல் பார்வை இல்லாத பொது மக்கள் இதை எப்படி கடந்து செல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்?
பதில் : பொதுமக்களுக்கு பொதுவாக தேர்தல் விதிமுறைகள், சாலை விதிகள், சட்ட விதிகள் குறித்து தெரியாது. ஆனால் அவற்றைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதுபோல்தான் சமூகத்தில் மனு நூலையும் மரபாக மக்கள் அறியாமல் பின்பற்றி வருகின்றனர்.
எல்லா மதங்களிலும் நம்பிக்கைகள் உள்ளன. ஆண், பெண் வேறுபாடுகள் உள்ளன. ஆனால் நான் எந்தச் சமூகத்தைச் சேர்ந்துள்ளனோ, அந்த சமூகத்தைப் பற்றிதான் என்னால் பேச முடியும். நான் இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ, சீக்கியரோ, சமணரோ அல்ல. நான் இந்து என்ற அடையாளத்தில் இருக்கும்போது இந்து சமூகம் என்னை எவ்வாறு நடத்துகின்றது என்பதைப் பற்றிதான் நான் பேச முடியும்.
கேள்வி : கொங்கு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன், திருமாவளவன் இது குறித்து பேசாமல் இருந்திருக்கலாம் என்று கூறியது பற்றிய உங்கள் கருத்து?
பதில் : ஈஸ்வரன் சொல்லும்படி இது பற்றி பேசாமல் இருக்க முடியாது. எவ்வளவு நாள்களுக்கு அவ்வாறு இருக்க முடியும்? இதை நான் தேர்தல் கணக்கு போட்டுப் பேசவில்லை. பெரியாருக்கு பிராமணர்கள் எதிரி கிடையாது. மனுதர்மமே அவருக்கு எதிரி. அதை எதிர்க்கும்போது கடவுளையும் பிராமணர்களையும் எதிர்த்து அவர் பேசினார். மனு தர்மமே அனைத்திற்கும் அடிப்படைக் காரணம்.
கேள்வி : வேல் யாத்திரைக்குத் தடை, மனு நூலுக்குத் தடை, விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்கக் கூடாது எனக் கோரப்படுகிறது. இங்கே கருத்து சுதந்திரம் பாதிக்கப்படவில்லையா?
பதில் : கருத்து சுதந்திரத்தை நாம் அனுமதிக்கிறோம். அது ஜனநாயக உரிமை. ஆனால் உள்நோக்கம் கொண்ட கருத்து சுதந்திரத்தை நம்மால் அனுமதிக்க முடியாது. இந்தியா முழுவதும் இது போன்ற மதம் சார்ந்த யாத்திரைகளை நடத்தி இந்து, இந்து அல்லாதோர் என பாஜக மக்களை பிளவுபடுத்தப் பார்க்கிறது. நாடு முழுவதும் மதம் சார்ந்து தாங்கள் நடத்திய திருவிளையாடல்களை தமிழ்நாட்டிலும் நிகழ்த்த பாஜக முயல்கிறது.
கேள்வி : வட இந்தியாவின் பட்டியலினத் தலைவர்களான அண்மையில் மறைந்த ராம் விலாஸ் பாஸ்வன், ராம்தாஸ் அத்வாலே போன்றோர் பாஜகவுடன் இணைந்து பயணிக்கிறார்கள். அதை ஏன் இங்கு உங்களால் செய்ய முடியவில்லை? அதேபோல் தமிழ்நாடு பாஜக திருமாவளவனைக் குறிப்பிட்டு தொடர்ந்து தாக்குவது ஏன்?
பதில் : அகில இந்திய அளவில் மக்கள் விரோதக் கருத்துக்களைக் கொண்ட இயக்கமாகவே நான் பாஜகவைப் பார்க்கிறேன். அதனால் என்னால் அவர்களுடன் இணைய முடியாது. குறிப்பாக சாதியவாத, மதவாத சக்திகளுடன் தேர்தல் உறவுகூட எங்களால் வைத்துக் கொள்ள முடியாது. அம்பேத்கர் மூர்க்கமாக மனு நூலை வாழ்நாள் முழுவதும் எதிர்த்து வந்தார். அதை எதிர்த்துப் போராடக்கூடிய இயக்கத்திற்கு நான் தலைவராக இருக்கின்றேன். அப்படி இருக்கும்போது பாஜகவுடன் எங்களால் இணைய முடியாது. இதுவே எங்கள் கொள்கை முடிவாகும்.
மேலும் பாஜக, மதத்தின் பெயரால் தமிழ்நாட்டை வன்முறைக் காடாக மாற்றப் பார்க்கிறது. இந்த இரண்டு வருடங்களில் இந்துக்களின் மனம் புண்பட்டுவிட்டது என்று கூறி பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து பாஜகவினர் நடத்தி வருகின்றனர். ஆனால் திமுகவில் இருக்கும் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் உள்ள 90 விழுக்காடு பேர் இந்துக்கள் தான், கம்யூனிஸ்ட் கட்சிகளில் 90 விழுக்காடு பேர் இந்துக்கள் தான். இவர்கள் இல்லாத எந்த இந்துக்களின் மனதை நாங்கள் புண்படுத்தி விட்டோம்? எங்கள் கட்சியில் இருக்கும் இந்துக்கள் மனதைப் புண்படுத்தி எங்களால் கட்சி நடத்த முடியுமா? பாஜகவினர் அரசியல் ஆதாயத்திற்காக பேசுகின்றனர். இது ஒரு கீழ்த்தரமான அரசியல்.
கேள்வி : விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டாம் கட்டத் தலைவரை நீங்கள் உருவாக்குவீர்களா?
பதில் : திட்டமிட்டு இரண்டாம் கட்டத் தலைவர்களை உருவாக்க முடியாது. ஒவ்வொருவரும் கட்சிக்காக கொடுக்கும் ஈடுபாடு அதனைத் தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: மனுநூலை விவாதிக்க இந்தத் தேர்தலிலிருந்துகூட விலகிக்கொள்கிறோம் - திருமாவளவன்