சென்னை கந்தன்சாவடி அண்ணா நெடுஞ்சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (44). இவர் மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றிவருகின்றார். நேற்றிரவு இவர், அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள உயர் கல்வி அமைச்சர் அன்பழகன் இல்லத்திற்கு அவரைச் சந்திக்க காரில் வந்துள்ளார்.
காரை அங்கு சாலையோரம் நிறுத்திவிட்டு அமைச்சரை சந்திக்க உள்ளே சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த கார் மீது மோதியது.
இதில் காரின் முன்பகுதியில் நின்றிருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அருள்விஜயபிரகாசம் (37) என்பவர் காயமடைந்தார். இவர் திண்டுக்கல் மாவட்ட வேளாண் துறை அலுவலர் விஜயலட்சுமியின் உதவியாளர் ரவிபாரதியின் கார் ஓட்டுநர் ஆவார்.
பின்னர் தகவலறிந்து அங்கு வந்த அடையாறு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் விபத்தில் சிக்கிய இரு கார்களைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வெளிநாட்டைச் சேர்ந்த ஜோ (54) என்பவரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட ஜோ எந்த நாட்டவர், எதற்காக இங்கு வந்துள்ளார் என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:கோவையில் கார் தீ விபத்து: கார் முற்றிலும் நாசம்