சென்னை: துணை நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல் துறையினர் ஜூன் 20ஆம் தேதி கைதுசெய்தனர். இந்தச் சூழலில் தனக்கு முன்பிணை வழங்கக்கோரி மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார். அந்த மனுவைத் தள்ளுபடிசெய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து முன்பிணை கோரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். அந்த மனுவில், "எனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தவறானவை; உண்மைக்குப் புறம்பானவை.
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை நான் ஏமாற்றவில்லை. எனக்கு எதிராகப் புகார் அளித்தவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல; நன்கு படித்து நல்ல வேலையில் இருப்பவர். ஏற்கனவே நான் திருமணமானவன் என்று அவருக்குத் தெரியும்.
இந்த நிலையில் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை. நான் கொடுத்த ஐந்து லட்சம் ரூபாய் கடன் தொகையைக் கேட்டபோது இந்தப் பிரச்சினை ஏற்பட்டது.
மற்றபடி நான் நிரபராதி. எனக்கு முன்பிணை வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயாராக இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.