சென்னை: ஐஐடியில் சாதியப் பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக குற்றம் சாட்டியதுடன், அது குறித்த புகாரையும், தனது ராஜினாமா கடிதத்தினையும் கடந்த ஜூலை மாதம் அனுப்பி பதவி விலகிய விபின், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “சென்னை ஐஐடியில் சாதியப் பாகுப்பாடு நிலவுவதாக கூறப்பட்ட புகாரை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட மூன்று நபர்கள் கொண்ட குழுவில், என்னால் குற்றம் சாட்டப்படும் ஜோத்ரி மாயா திரிபாதியும் உள்ளார். விசாரணைக் குழுவில் இருந்து ஜோத்ரி மாயா திரிபாதியை மாற்ற வேண்டும் என ஐஐடி நிர்வாகத்திற்கு இரண்டு முறை கடிதம் எழுதினேன்.
மேலும் விசாரணை முடியும் வரையில் துறைத் தலைவர் பொறுப்பில் இருந்து அவரை தற்காலிகமாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்” எனக் கூறியுள்ளார்.
“பேராசிரியர் ஜோத்ரி மாயா திரிபாதி, சமூகவியல் மற்றும் மானுடவியல் துறையில் எனக்கு எதிரான சாதிய பாகுபாட்டிற்குக் காரணமாக இருந்தவர். மேலும், மானுடவியில் துறையின் தலைவராக இருந்ததால் விசாரணை முறையாக நடைபெறவில்லை” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
துறைத்தலைவரை நீக்கு
"பதவி உயர்வு மற்றும் ஆராய்ச்சிக்கான நிதி பெறுதல் என துறையின் தலைவர் அதிகாரம் உள்ளவராக இருக்கிறார். இதனைப் பயன்படுத்தி விசாரணையை தவறான முறையில் திரிபாதி கொண்டு செல்கிறார். எனவே, விசாரணை முடியும் வரையில் திரிபாதி துறைத் தலைவராக இருக்கக் கூடாது.
இது குறித்து ஐஐடியின் இயக்குநருக்கு கடிதம் எழுதியும் திரிபாதியை துறைத்தலைவர் பதவியில் இருந்து இறக்கவில்லை. எனவே, நேர்மையான நீதி விசாரணை நடைபெறுவதற்கு உதவிட வேண்டும்.
மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையின் தலைவர் பதவியில் இருந்தும், விசாரணைக் குழுவில் இருந்தும் ஜோத்ரி மாயா திரிபாதி நீக்கப்பட வேண்டும், அதன் பின்னர் மீண்டும் மூன்று நபர்கள் கொண்டு குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
சாதிய பாகுபாடுகள் நீங்க முதற்படியாக, ஐஐடியின் நிர்வாகத்தில் உயர்ந்தப் பதவிகளான ஆட்சி மன்றக்குழு, துறைத்தலைவர்கள் போன்ற பதவிகளிலும், சென்னை ஐஐடியின் புதிய இயக்குனராகவும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லது பிறப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிலையில், விபின் சென்னை ஐஐடியில் மீண்டும் பணியில் சேர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாதிய பாகுபாடு: உதவிப் பேராசிரியர் பணி விலகலுக்கு ஐஐடி விளக்கமளிக்க மறுப்பு